மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது காதலன் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11-ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து புதுமணத் தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு சென்றனர்.
கடந்த மே 23-ம் தேதி, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் நாங்ரியட் கிராமத்தில் உள்ள விடுதியில் இருந்து வெளியேறிய இவர்களை பிறகு காணவில்லை.
இதையடுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மேகாலயா போலீஸார் இத்தம்பதியை தேடினர். இதில் 24-ம் தேதி இத்தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டரை சோராரிம் என்ற கிராமத்தில் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீஸார், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரகுவன்சியின் செல்போன் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். இதையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது.
முன்னதாக இத்தம்பதியினர் காணாமல்போன நாளில் அடையாளம் தெரியாத 3 ஆண்களுடன் சோனம் காணப்பட்டதாக உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் நால்வரும் இந்தியில் பேசியதால் என்ன பேசினார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் விசாரணையை போலீஸார் துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு உ.பி.யில் இருந்து சோனம் அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இதையடுத்து அவரது இருப்பிடத்தை காசிப்பூர் அறிந்த போலீஸார், வாராணசி – காசிப்பூர் சாலையில் ஒரு உணவகத்தில் இருந்த அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆசைப்பட்டு சோனம் கூலிப்படை அமைத்து ரகுவன்சியை கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து இக்கொலையில் தொடர்புடைய ஆகாஷ் ராஜ்புத் (19), விஷால் சிங் (22), ராஜ் குஷ்வாகா, ஆனந்த் சிங் குர்மி (23) ஆகிய நால்வரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இவர்களில் ஆகாஷ் ராஜ்புத் உ..பி.யிலும் மற்ற மூவரும் ம.பி.யிலும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராஜ் குஷ்வாகா, சோனத்தின் காதலர் எனத் தெரியவந்துள்ளது. சோனத்தின் சகோதரர் நடத்தி வரும் ஒரு நிறுவனத்தில் இவர்கள் நால்வரும் பணியாற்றி வந்தனர். இவர்களில் ராஜ் குஷ்வாக அக்கவுன்டன்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
கொலைக்கான சதித் திட்டத்தை சோனம்தான் தீட்டியுள்ளார். ஆனால் மற்ற மூவரும் சேர்ந்து ரகுவன்சிசை கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் மேகாலாயா போலீஸாரிடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கொலை நடந்த 7 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு போலீஸாருக்கு மேகாலயா முதல்வர் சங்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கிடைையில் ரகுவன்சியை சோனம் கொலை செய்திருக்க மாட்டார் என்ற அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை கோரியுள்ளார்.