புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பாக இந்திய ஹாக்கி அணியின் கேட்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எச்ஐஎல் போட்டி நடைபெறவுள்ளது.
இம்முறை ஆடவர் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. தவிர, முதன்முறையாக மகளிருக்கான எச்ஐஎல் தொடரும் நடத்தப் படுகிறது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இன்றும் வீரர்களுக்கான ஏலம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மேலும், வரும் 15-ம் தேதி (நாளை) ஹாக்கி வீராங்கனைகளுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. வீரர்களுக்கான ஏலத்தில் இந்திய உள்ளூர் வீரர்கள் 400 பேர் பதிவு செய்திருந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் 250 உள்ளூர், 70க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஆறாவது சீசன், வரும் டிசம்பர் 28-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரை. ராஞ்சி, ரூர்கேலாவில் நடைபெறும். மகளிர் இறுதிப் போட்டி ஜனவரி 26-ம் தேதி ராஞ்சியில் நடைபெறும் ஆடவர் ஹாக்கி போட்டி இறுதிச் சுற்று பிப்ரவரி 1-ம் தேதி ரூர்கேலாவில் நடைபெறும். இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நேற்று டெல்லியில் தொடங்கியது.
இதில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கை ரூ.78 லட்சத்துக்கு சூர்மா ஹாக்கி கிளப் எடுத்துள்ளது.
இந்திய வீரர் அபிஷேக்கை ரூ.72 லட்சத்துக்கு பெங்கால் டைகர் கிளப் ஏலம் எடுத்துள்ளது. இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங்கை உ.பி. ருத்ராஸ் கிளப் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர் தயான் காசியம் ரூ.25 லட்சத்துக்கு சூர்மா கிளப்பாலும், நெதர்லாந்து வீரர் டூக்கோ டெல்ஜென் காம்ப் ரூ.36 லட்சத்துக்கு தமிழ்நாடு டிராகன்ஸ் அணியாலும் எடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு டிராகன் அணி சார்பில் நெதர்லாந்து வீரர் ஜிப் ஜான்சன் ரூ.54 லட்சத்துக்கும். சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பில் ரூ.42 லட்சத்துக்கு ஆஸ்திரேலிய வீரர் ஜெரமி ஹேவரட் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.