கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் 7 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது உறுதியானதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் இயக்குநர் பத்மா பசவந்தப்பா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. கர்நாடகாவில் 2004-ம் ஆண்டில் இருந்து 18 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 7000 பேருக்கு எச்ஐவி தொற்று இருக்கிறது. இதனை திரித்து, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
எங்களிடம் இருக்கும் புள்ளி விவரங்களில் மாணவர்கள், இளம்பெண்கள், இல்லத்தரசிகள் என்பது போன்ற வகைப்பாடு எதுவும் இல்லை. இந்த நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லூரிகளில் எச்ஐவி பரிசோதனை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, நாட்டில் எச்ஐவி தொற்று அதிகமானோர் வாழும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு பசவந்தப்பா கூறியுள்ளார்.















