5 மாத சிறைவாசத்துக்கு பிறகு மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆனார் ஹேமந்த் சோரன்

0
41

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், முதல்வர் பதவியை அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை சேர்ந்த சம்பய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.

ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், ‘நிலம் வாங்கியது தொடர்பான நிதி மோசடியில், ஹேமந்த் சோரன் நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஆவணங்களில் இல்லை. அவர் குற்றவாளி அல்ல என நம்புவதற்கான காரணங்களும் உள்ளன’ என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரனை சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதனால், முதல்வர் பதவியை சம்பய் சோரன் கடந்த 3-ம் தேதி ராஜினாமா செய்தார். முதல்வராக பதவியேற்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார்.

ஜூலை 7-ம் தேதி பதவியேற்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானதால், நேற்றே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மாநிலத்தின் 13-வது முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பது இது 3-வது முறை.

விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், ‘‘அரசியலில் பல ஏற்ற, இறக்கங்கள் வரும். அதனால் சிறை சென்றேன். அப்போது அரசை சம்பய் சோரன் வழிநடத்தினார். நீதிமன்ற உத்தரவால் நான் தற்போது வெளியே வந்துள்ளேன். நான் முதல்வராக பதவியேற்றுள்ளதால், அனைத்து பணிகளும் மீண்டும் தொடங்கும்’’ என்றார்.