நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை

0
483

தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளி்ட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (மார்ச் 1) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 4, 5, 6-ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிப். 28-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி காரைக்காலில் 5 செ.மீ., திருவாரூர் மாவட்டம் பாண்டவரடி, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் மலையூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here