நாட்டின் பல்வேறு மாநில கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும் சரஸ் மேளா, விற்பனை கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இக்கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை, பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ எனும் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சி நாளை (டிச.27) தொடங்குகிறது. இந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திராவின் அழகிய மரச் சிற்பங்கள், கொண்டப்பள்ளி பொம்மை, குஜராத் கைத்தறி ஆடை, பிஹார் மதுபானி ஓவியம், கேரள பாரம்பரிய உணவு வகைகள், மகாராஷ்டிரா மாநில கோண்ட் பழங்குடியினரிடன் வண்ண ஓவியங்கள் என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
இத்துடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஈரோடு தரைவிரிப்பு, காஞ்சிபுரம் பட்டு புடவை, கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், கரூர் கைத்தறி துண்டு, தூத்துக்குடி பனை பொருட்கள், விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலை, திருச்சி செயற்கை ஆபரணங்கள் போன்றவையும் விற்கப்படும்.
ஜனவரி 9-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். உணவு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. அனுமதி இலவசம். வாகனங்கள் நிறுத்தவும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.