ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் (-0.147) 5-வது இடத்திலும் உள்ளன.
ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். ஏனெனில் குஜராத் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற உற்சாகத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு குஜராத் அணி முன்னேறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரியான் பராக் விளாசிய 90 ரன்கள் உதவியுடன் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்தது. எனினும் அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை வைபவ் சூர்யவன்ஷி (404 ரன்கள்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (312) மற்றும் துருவ் ஜூரெல் (290) என முன்வரிசை வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அணியைத் தாங்கிப் பிடித்தாலும், கீழ்வரிசையில் கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஏனெனில், கீழ்வரிசை வீரர்களில் டோனோவன் பெரேரா (229 ரன்கள்) மட்டுமே 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து வருகிறார். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் துருவ் ஜூரெல் சந்தேகத்துக்கு இடமின்றி முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.
இருப்பினும் கடைசி 3 ஆட்டங்களில் அவரிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அதிலும் முதலில் பேட் செய்யும் போது அவரிடம் இருந்து அதிரடியான ஆட்டம் வெளிப்படுவதில்லை. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண துருவ் ஜூரெல் முயற்சிக்கக்கூடும். குஜராத் அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் சிறந்த பார்மை எட்டியுள்ளனர்.
ஒரு சதம், 2 அரை சதம் என 385 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 378 ரன்கள் சேர்த்துள்ள கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றத் தொடங்கி உள்ளனர். ஜாஸ் பட்லர் (335 ரன்கள்) மீண்டும் சீரான ஆட்டத் திறனை வெளிப்படுத்த தொடங்கி உள்ளதும் அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
இருப்பினும், முன்வரிசை வீரர்களையே பெரிதும் நம்பியிருக்கும் மற்ற அணிகளைப் போலவே குஜராத் அணியும் உள்ளது. டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தால் கீழ்வரிசை வீரர்களுக்குப் பெரும் அழுத்தத்தை உண்டாக்கிவிடும். ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகள் சரிந்தபோது, வெறும் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்து குஜராத் அணி மோசமாகத் தோல்வியடைந்திருந்தது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் 16 விக்கெட்களை கைப்பற்றியுள்ள காகிசோ ரபாடா, 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பிரசித் கிருஷ்ணா, 11 விக்கெட்களை கைப்பற்றியுள்ள முகமது சிராஜ் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சவாய் மான்சிங் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு முறை 220+ ரன்கள் இலக்கு வெற்றிகரமாக துரத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
