பேரன்பும் பெருங்கோபமும்: திரை விமர்சனம்

0
49

அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நாயகன் ஜீவா (விஜித் பச்சான்), குழந்தை கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்படுகிறார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அதைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவர் போலீஸிடம் சில ரகசியங்களைச் சொல்கிறார். செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி ஜீவா சிறைக்குச் சென்றது ஏன்? போலீஸாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது, படம்.

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சாதி கொடுமைகள் பற்றியும் அதை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் பின்னணியிலும் எத்தனை படங்கள் வந்தாலும் அவை அனைத்தும் இன்றைய தேவையே. அப்படி ஒரு பின்னணியில் ஆணவக் கொலை பற்றி அழுத்தமாகப் பேசுகிறது, அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி இருக்கும் இந்த படமும். பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை மட்டுமே வைத்து சாதாரணம் என்று ஒதுக்கிவிட முடியாது.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் திரைக்கதை சில இடங்களில் தடுமாறினாலும் சொல்ல வந்த விஷயத்துக்காக, அதைப் பொறுத்துக் கொள்ளலாம். பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும் பெருங்கோபத்துடன் வரும் இரண்டாம் பாதி காட்சிகள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. முன் பின்னாகக் கதை சொல்லும் உத்தியில், முதன்மைக் கதாபாத்திரமான ஜீவாவின் உருமாற்றம் ரசிக்க வைக்கிறது.

தங்கர் பச்சானின் மகன் விஜித் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். வெவ்வேறு காலகட்டத்துக்கான தோற்றங்களில் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறந்த நடிப்பை அவரிடம் எதிர்பார்க்கலாம். நாயகி ஷாலி நிவேகா, சாதி வெறி கொண்ட மாமியாரிடம் சிக்கித் தவிப்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் கதாபாத்திரங்களில், அமைச்சராக வரும் மைம் கோபி, அவரது கையாள் அருள்தாஸ், சாதி சங்கத் தலைவர் லோகு ஆகியோர் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். சாதி வெறிகொண்ட அம்மாவாக சுபத்திரா, போலீஸ் டிஎஸ்பி சாய் வினோத் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

சிறந்த கதை சொல்லியான எழுத்தாளர் பவா செல்லதுரையின் மூலம் நாயகனின் வாழ்வைச் சொல்ல வைத்திருக்கும் உத்தி ரசனையாக இருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை பெருங்கோபத்தின் ஆவேசத்தை நமக்குக் கடத்துகிறது. ஜே.பி.தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு, மாஹே-வின் அழகை அள்ளி வந்து தருகிறது. முதல் பாதியின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் ராமர் இன்னும் கச்சிதமாக்கி இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here