புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த பெண் கோட்டாட்சியரை, லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: பழனிசாமி: கடந்த ஆண்டு ஏப்ரலில் தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலரை ஆளுங்கட்சி நிர்வாகி ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதன் உச்சமாக, 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் மணல் கடத்தலை தடுத்த கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதை தடுக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, இதுபோன்ற செய்திகளை மக்கள் கவனத்துக்கு வராதபடி தடுப்பதில் முனைப்பு காட்டுவது கடும் கண்டனத்துக்குரியது.
பாமக தலைவர் அன்புமணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளைக் கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் சர்வ சாதாரணமாக குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பயமே இல்லாத நிலை உள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை தடுத்த கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல மேற்கொண்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதிகரித்து வரும் மணல் கொள்ளையும், அதை தடுக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது கண்டனத்துக்குரியது. அதிகாரிகள் நேர்மையாக, சுதந்திரமாக பணியாற்றுவதற்கான சூழலை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.