பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.65 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்காத படத்தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இப்படத்துக்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.30 லட்சத்தை வழங்கவில்லை என்றும், டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட ரூ.27 லட்சத்தை முறையாக செலுத்தவில்லை என்றும், பட வெளியீட்டுக்காக பெற்ற ரூ.35 லட்சம் கடனை திருப்பித்தரவில்லை எனக்கூறி படத்தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் அரவிந்த் சாமிக்கு மொத்தமாக செலுத்த வேண்டிய ரூ.65 லட்சத்தை 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், ரூ. 27 லட்சம் டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் படத்தயாரிப்பாளருக்கு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவுப்படி தனக்கான தொகையை வழங்காததால் உயர்நீதிமன்ற உத்தரவைஅமல்படுத்தக் கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துகளை அறிவிக்கக்கோரியும் அரவிந்த்சாமி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அந்தமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென படத் தயாரிப்பாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்குவந்தது.
அப்போது தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, சொத்து எதுவும் இல்லையென்றால் திவாலானவர் என அறிவித்து கைது நடவடிக்கையை தவிர்க்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறி, படத் தயாரிப்பாளரான முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 8-க்கு தள்ளிவைத்துள்ளார்.