Home மாநில செய்திகள் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

0

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளுக்கான கட்டிடங்களை கட்டும் திமுக அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை.

வேலூர் மாநகரில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். ஆனால், இந்த மருத்துவமனைக்காக புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்த மருத்துவமனை மட்டுமல்லாமல், புதிதாக மேம்படுத்தி கட்டப்பட்ட சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வை தராமல் அரசு மருத்துவர்களை திமுக அரசு புறக்கணிக்கிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதை அரசு கண்டுகொள்வதில்லை. மாறாக, போராடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

எனவே அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே அங்கு அதற்குரிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version