தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞரை போலீசார் அடித்து கொன்றதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் அப்போது விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்தததை அடுத்து கதறி அழுத பெற்றோர் போலீசார் தான் அடித்து கொன்றுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 17 ஆம் தேதி காலையில் போலீசார் கைது செய்ததனர். ஆனால் மாலை வரை எங்களிடம் என் மகனை கைது செய்தது பற்றி சொல்லவே இல்லை. என் மகன் மயங்கிவிழுந்துவிட்டான் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணும் போது தான் எங்களுக்கு போலீசார் தெரிவித்தனர் என பெற்றோர் கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் அட்மிட் பண்ணும்போதே அவனது தலையில் காயம் இருந்தது. கை, மற்றும் தலையிலும் கட்டு போடப்பட்டது. போலீசார் தான் அடித்து கொன்று இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர் ஒரு புறம் போலீசார் தான் அடித்து கொன்றதாக கூறும் நிலையில், இது லாக்கப் மரணம் கிடையாது என டிஎஸ்பி சுனில் விளக்கம் அளித்துள்ளார்.
லாக் அப் டெத் இல்லை – டிஎஸ்பி ஏற்கனவே அருணாச்சலம் தலையில் கட்டி இருந்ததாகவும் அதற்கான சிகிச்சையில் தான் அவர் இறந்ததாகவும் டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார். மேலும், விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் அருணாச்சலத்தை மருத்துவமனையில் சேர்த்தோம் என்றும் அப்போதே அவர்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினோம் என்றும் டிஎஸ்பி விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதே சமயம், தலை, காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் தனக்கு எப்படி அடி பட்டது என்பது குறித்து உறவினர் ஒருவரின் செல்போனில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் போலீசார் என்னை அடித்தார்கள். கையில் அடித்தனர். என கூறுகிறார். தன்னை போலீசார் தாக்கியதாக இளைஞர் அருணாச்சலம் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளதால் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன நடந்தது? தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம் (வயது 29). இவர் லெவஞ்சிபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 18 ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணையின் போது அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக போலீசார் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது தலையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்.
அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடலை வாங்க மாட்டோம் எனவும் குடும்பத்தினர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி – நெல்லை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
