வந்தேபாரத் விரைவு ரயிலில் பயணிக்கு வழங்கிய மசால் வடையில் `ஃபெவி க்விக்’ (உடனடியாக ஒட்டும் பசை) இருந்ததால், அந்த பயணி கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உணவை வழங்கிய கேட்டரிங் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் போர்க்கொடி தூக்கினர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சேகர். இவர் லயன்ஸ் கிளப்பை சேர்ந்த 150 பேருடன் மைசூரு சென்றுவிட்டு நேற்று மதியம் சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயிலில் புறப்பட்டார். இந்த ரயிலில் பயணத்துடன் சிற்றுண்டிக்கும் சேர்த்து ரூ.1,400 கட்டணம் செலுத்தி இருந்தார்.
இந்த ரயிலில் மதியம் சுமார் 3 மணியளவில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதிலிருந்த மசால் வடையின் உள்ளே `ஃபெவி க்விக்’ (உடனடியாக ஒட்டும் பசை) இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், சக லயன்ஸ் கிளப் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
மேலும் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ரயிலில் வழங்கிய சிற்றுண்டியை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் திருப்பி கொடுத்தனர். சிற்றுண்டி வழங்கிய கேட்டரிங் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, டிக்கெட் பரிசோதர், ரயில் மேலாளர் ஆகியோர் விரைந்துவந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, சேகரிடமிருந்து புகாரை பெற்று, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவன ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதுகுறித்து, சேகர் கூறுகையில், “வந்தேபாரத் ரயிலில் ஐஆர்சிடிசி அனுமதி வழங்கிய ஒப்பந்த நிறுவனம்தான் உணவு, சிற்றுண்டி தயாரித்து பயணிகளுக்கு விநியோகிக்கின்றது. வந்தே பாரத் ரயிலில் உணவு, சிற்றுண்டிக்கான கட்டணம் அதிகம்தான்.
ஆனால் உணவில் தரமில்லை. இது முற்றிலும் ஒப்பந்ததாரர் தவறுதான். ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலனில் உரிய அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.
