திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக சசி தரூர் உள்ளார். தற்போதைய தேர்தலில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுகிறார். அவரது தனிச் செயலாளராக சிவகுமார் பிரசாத் (72) என்பவர் பணியாற்றினார். வயது மூப்பு காரணமாக அவர் பணியில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை தங்க கடத்தல் கும்பலை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களில் சிவகுமார் பிரசாத்தும் ஒருவர். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சிவசங்கர் பிரசாத் சிறுநீரக நோயாளி ஆவார். அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகிறார். மனிதாபிமான அடிப்படையில் அவரை பணியில் சேர்த்தேன். என்னிடம் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றினார். தங்ககடத்தல் வழக்கில் அவர் சிக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கூறும்போது, “மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தங்க கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஊழலில் திளைக்கும் இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ளன” என்றார்.
மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள், தங்க கடத்தல் கூட்டாளிகள் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்து உள்ளார்.