பிஹாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாய் கடுமையான நோயிலிருந்து குணமடைந்ததால் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு ஓடிச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகிறார். பிஹார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயதான மோனு மேதுர்பாலா. இவரது தாய் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்ததாக தெரிகிறது.
தனது தாய் குணமடைந்தால் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களையும் ஓடிச் சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவேன் என மோனு வேண்டிக் கொண்டுள்ளார். அதன்படி மோனுவின் தாய் கடுமையான நோயிலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார்.
கடந்த மார்ச் 15-ம் தேதி தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார். தினமும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் ஓடி வரும் அவர், இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார். மோனுவின் இந்த ஆன்மிகப் பயணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில் அவரது வித்தியாசமான யாத்திரையை கவனித்த காவல் துறையினர் அவரை நிறுத்தி, அவரது பயணம் குறித்து ஆர்வத்துடன் உரையாடும் காட்சிகள் உள்ளன.
நாட்டின் பல பகுதிகள் வழியாக கால்நடையாகப் பயணம் மேற்கொண்ட மோனுவை, வழியில் சந்தித்த பலர் மரியாதையின் அடையாளமாக அவரது கால்களைத் தொட்டு ஆசி பெற்றனர். மேலும், பலரும் அவரை உற்சாகப்படுத்தி வாழ்த்தி, அவரது ஆன்மிகப் பயணத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மோனுவின் அர்ப்பணிப்பு மற்றும் தாய்ப்பாசம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பலரும் அவரை ராமாயணத்தில் வரும் தாய், தந்தை பக்தியின் சின்னமாகக் கருதப்படும் ஸ்ரவண குமாருடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
