மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் அக்டோபர் 10-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இவர் அமெரிக்க குடியுரிமை மற்றும் இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடியுரிமை (ஓசிஐ) பெற்றவர். ஓசிஐ கார்டு என்பது வெளிநாட்டு சான்றளிக்கப்பட்ட குடியுரிமை வைத்திருக்கும் தகுதியுள்ள இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படும் அட்டையாகும்.
இந்திய வெளிநாட்டுப் பிரஜை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஓசிஐ தகுதி என்பது இந்தியக் குடியுரிமையை வழங்காது. ஓசிஐ கார்டுதாரர்கள் இந்தியாவில் தங்கியிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டுப் பிரஜைகளாகவே கருதப்படுவார்கள்.
இருப்பினும், விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவுக்கு வந்து செல்ல வாழ்நாள் முழுவதுக்குமான ‘மல்டிபிள் என்ட்ரி விசா’ உள்ளிட்ட சில சிறப்புச் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஓசிஐ கார்டுதாரர்கள் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கவோ, நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது. மேலும் இந்தியாவில் நிபந்தனையற்ற வகையில் தங்க முடியாது.
இந்த நிலையில்தான் நடிகர் இம்ரான் கான் வரும் அக்டோபர் 28-க் குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றத்துறை உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கான் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அவர் சட்டத்தை மீறிவிட்டதாக பாஜக தலைவர் கிரிட் சோமையா அளித்த புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து சோமையா கூறும்போது, “இந்தியாவில் இதுபோன்று ஆயிரக்கணக்கான இம்ரான் கான்கள் உள்ளனர். அவர்கள் இங்கு வாழ்ந்து கொண்டே நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்றார்.
