எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

0
11

கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அமைச்சரவைப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டது.

உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்வுகளில் ஆடம்பரத்தைத் தவிர்க்க ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்ற விதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல 3 மாதங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத வெளிநாட்டுப் பயணங்களுக்கு எகானமி வகுப்பில் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் தேநீர் மற்றும் உணவு செலவுகள், உச்சிமாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவது ஆகியவை தவிர்க்கப்பட்டு, காணொலி வாயிலாக மட்டுமே கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here