ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. எனினும், அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலியே முதலிடம் பிடித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த ஐபிஎல் ரன்கள் அதிகம் குவிக்கும் தொடராக அமைந்தது. பல போட்டிகளில் 200-ஐ தாண்டியே ஸ்கோர்கள், சில போட்டிகளில் 250+ என்பது சர்வசாதாரணமாக கடந்தது. இதனால், பேட்டர்களுக்கு இந்த சீசன் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ரன் வேட்டையில் டாப் 5 வீரர்கள்:
1) விராட் கோலி: நடப்பு சீசனில் ஆரஞ்சு தொப்பி வின்னர் விராட் கோலி தான். இந்த தொடரில் 15 இன்னிங்ஸ்களில் சராசரி 61.75, ஸ்ட்ரைக் ரேட் 154 உடன் 741 ரன்கள் குவித்து டாப் ரன் ஸ்கோரர் ஆனார். இதில் ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 113.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2016 சீசனில் 973 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறுவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் அதிரடி ஆட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
2) ருதுராஜ் கெய்க்வாட்: நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்கிற பொறுப்புடன் அந்த அணிக்கு பேட்டிங் ஆர்டரை துவக்கி வைத்த ருதுராஜ் கெய்க்வாட், ரன் வேட்டையில் டாப் 5 வீரர்களில் இரண்டாவது வீரராக உள்ளார். நடப்பு சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் சேர்த்து மொத்தமாக 583 ரன்கள் குவித்தார். சராசரி 53, ஸ்ட்ரைக் ரேட் 141.16, அதிகபட்ச ஸ்கோர் 108.
கடந்த சில சீசன்களாகவே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இருந்த ருதுராஜ் கெய்க்வாட், இம்முறை கேப்டன் என்கிற கூடுதல் பொறுப்புடன் இறங்கினாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தனது வழக்கமான அதிரடியை கையாண்டார். உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவுடன் விளையாடியவருக்கு அதுவும் கைகூடவில்லை, ஐபிஎல் கோப்பை கனவும் கைகூடாமல் நழுவியது.
3) ரியான் பராக்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய சென்ஷேசன் ரியான் பராக். கடந்த சீசனுக்கு பிறகு நேஷனல் அகாடமியில் பயிற்சி பெற்று புதிய தெம்புடன் நடப்பு ஐபிஎல் சீசனை தொடங்கிய அவர், 573 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த சீசனில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவரின் அதிகபட்ச ஸ்கோர் 84. எனினும், சராசரி 52.09, ஸ்ட்ரைக் ரேட் 149.21 என்று ராஜஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டிகளில் தூணாக நின்று வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், பிளே ஆப்பில் சரியாக பங்களிக்கவில்லை.
4) டிராவிஸ் ஹெட்: பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான பிறகு அவரின் தளபதியாக செயல்பட்ட டிராவிஸ் ஹெட் அதிரடியில் வெளுத்து வாங்கினார். சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி யுக்தியில் டிராவிஸ் ஹெட்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஒரு சதம், 4 அரை சதத்துடன் 567 ரன்கள் குவித்த அவரின் சராசரி 40.50, ஸ்ட்ரைக் ரேட் 191.55, அதிகபட்ச ஸ்கோர் 102. எனினும், பைனல் மற்றும் பிளே ஆப் போன்ற முக்கிய போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தத் தவறினார்.
5) சஞ்சு சாம்சன்: மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாடி, அதனை பூர்த்தி செய்த வீரர் சஞ்சு சாம்சன். நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியை ஒற்றை மனிதனாக சுமந்து வெற்றியைத் தேடி கொடுத்த சஞ்சு மொத்தமாக 16 போட்டிகளில் 531 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 அரை சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 48.27, ஸ்ட்ரைக் ரெட் 153.46, அதிகபட்ச ஸ்கோர் 86. கேப்டனாக தோல்வி கண்டாலும், அவருக்கு இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது.