நொய்டாவில் புதன்கிழமை பின்னிரவு ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பேருந்து டெல்லியில் இருந்து பிஹார் மாநிலத்துக்கு புறப்பட்டுள்ளது. அந்த பேருந்து பிஹார் மாநில பதிவு எண்ணை கொண்டது. பேருந்தில் சுமார் 35 முதல் 40 பயணிகள் இருந்துள்ளனர். இரவு 11 மணி அளவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையின் 33-வது கிலோமீட்டர் மைல்கல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த பயணிகளில் சிலர் பீதியில் ஓடும் பேருந்தில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர்.
இதன் பின்னர் தீ விபத்து குறித்த தகவல் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டனர். பேருந்தின் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கைலாஷ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜேவார் காவல் ஆய்வாளர் அஜய் குமார் சிங் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சையிலும், மற்ற பயணிகள் வீடு திரும்பி உள்ளதாக தகவல்.
“பேருந்தில் தீ பற்றியதும் பேருந்துக்குள் புகை மூட்டம் ஏற்பட்டது. எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றும் முடியவில்லை. சிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. அப்போது நான் எனது போனை மட்டும் எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து தப்பினேன். என்னை யாரோ வெளியில் இழுத்தனர். அது மட்டும் தான் எனக்கு தெரியும்,” என்று இந்த விபத்தில் உயிர் தப்பிய ரிங்கி ராஜ்புட் தெரிவித்தார்.
பேருந்தை நிறுத்த மறுத்த ஓட்டுநர், நடத்துநர்
பேருந்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக ஓட்டுநர், நடத்துநரிடம் ஏதோ பற்றி எரிந்து கருகும் வாசம் வருவதாக பயணிகள் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் அது ஒன்றும் இல்லை பேருந்தில் வழக்கமாக வருவது தான் என ஓட்டுநரும், நடத்துநரும் தெரிவித்துள்ளனர். பயணிகள் மீண்டும் சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் பேருந்தை இயக்கி உள்ளனர். இந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஓட்டுநர், நடத்துநர் அங்கிருந்து தப்பினர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தின் நிலை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
