காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ‘பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்மீர்’ என்ற புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) சோதனைச் சாவடியில் நேற்றுமுன்தினம் பைக்கில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்மீர் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது உமர் அஸ்ஸாம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்மீர் பொறுப்பேற்கிறது.
ஆக்கிரமிப்பு இந்துத்துவ ஆட்சியும், அதன் அமைப்புகளும் திணித்துள்ள ‘செயற்கையான அமைதி’ என்ற முகத்திரை, முஜாஹிதீன்களின் நடவடிக்கைகளால் மீண்டும் கிழிக்கப்பட உள்ளது.
வரும் நாட்களில் இந்துத்துவா ஆட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேரழிவை ஏற்படுத்தும் புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். அவர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் வரை இந்தப் புனித ஜிஹாத் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
