2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்தால் அது ராஜீவ் காந்திக்கு செய்த துரோகமாகிவிடாதா என்று என்னை நானே அப்போது கேட்டுக்கொண்டேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். சுயசரிதையில் சோனியா காந்தி எழுதி இருப்பதாவது: 2004-ம் ஆண்டு பாஜகவை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய அனைத்து அரசியல் சக்திகளிலும், தென்னிந்தியாவில் திமுகதான் மிக முக்கியமான கட்சியாக இருந்ததால், அக்கட்சியுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த எங்களது கட்சி மூத்த தலைவர்களில் சிலர் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தனர். 1991-ம் ஆண்டு தேர்தலில், ராஜீவ் காந்தியைக் கொன்ற எல்டிடிஇ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு திமுக தொண்டர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் ராஜீவுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தனர்.
ராஜீவ் படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தமிழ் கொலையாளிகளுக்கு திமுக தலைவர் மறைமுகமாக ஆதரவளித்ததாகக் குற்றம்சாட்டி தனது அறிக்கையை வெளியிட்டபோது, 1997-ம் ஆண்டு அப்போதையே பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைக்கூட காங்கிரஸ் வாபஸ் பெற்றிருந்தது. அந்த வேதனையான நினைவுகள் மீண்டும் என்னை வாட்டத் தொடங்கின. அப்போது, “நான் என்ன செய்ய வேண்டும்? அவர்களுடன்(திமுக) கைகோத்தால், அது ராஜீவ் காந்திக்குச் செய்யும் துரோகமாகிவிடாதா?” என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.
மறுபுறம், “பாஜகவுக்கு எதிரான நமது கூட்டணியை வலுப்படுத்த அவசரமாக முடிவெடுக்க வேண்டியிருந்தது. திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க திமுக தலைவர் கருணாநிதிக்கு நான் முதன் முதலாக தொலைபேசியில் அழைத்தபோது, என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. எனக்குத் தமிழ் தெரியாது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
ஆனாலும், நான் தொலைபேசியில் பேசியபோது அவர் அன்பாகப் பதிலளித்தார். அதன்பிறகு நாங்கள் நேரில் சந்தித்து, இரு கட்சிகளும் இணைந்து கூட்டணியாக செயல்படுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். காலப்போக்கில் கருணாநிதி மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது. கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போதெல்லாம் நான் தலையிட வேண்டியிருக்கும். இறுதியாக, 2004-ம் ஆண்டு மே 4-ம் தேதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) உருவானது. இவ்வாறு சுயசரிதையில் சோனியா காந்தி எழுதி உள்ளார்.
டிகேஎஸ் இளங்கோவன் பதில்
இதுகுறித்து திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, “அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், ஒரு கட்டத்தில் எங்களுடன் வர வேண்டியிருந்தது. பிறகு திமுக தங்களோடு இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்பினார். பாஜகவை எதிர்க்க திமுக ஒரு வலுவான சக்தியாக இருக்கும் என்று அவர் கருதியதாலேயே நாங்கள் அவருடன் இருந்தோம். அதைத்தான் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் எங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஈழத் தமிழர்களையே ஆதரித்தோம்” என்றார்.
