Home தேசிய செய்திகள் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள் சடலமாக மீட்பு

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள் சடலமாக மீட்பு

0

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவலர்கள், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இருவரும் துப்பாக்கி காயங்களுடன் செனாப் பள்ளத்தாக்கின் அடர்ந்த வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காவல்துறை தற்காலிக செயல்பாட்டு தளங்களை (Temporary Operating Bases – TOBs) ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்துவார் பகுதியைச்சேர்ந்த ராஷ்பால் குமார் (45), பாபி சந்த் (57) ஆகிய இருவரும், இந்த தற்காலிக செயல்பாட்டு தளங்களில் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும், ராணுவத்தின் 17-வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினருடன் இணைந்து கிஷ்துவாரின் அடர்ந்த காடுகள் நிறைந்த பாஸ்னான் பகுதிக்குச் சென்றுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இவர்கள் தற்காலிக செயல்பாட்டு தளத்துக்கு திரும்பி வராததை அடுத்து, இவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவலர்களின் செல்போன்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செயலிழந்துவிட்டன. இந்நிலையில், இருவரது உடல்களும் செனாப் பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், துப்பாக்கி காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று (நவ. 12) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தெற்கு காஷ்மீரின் குல்காமில் சிஆர்பிஎப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version