ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதற்கான தகுதி சுற்று போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஓசியானியா கூட்டமைப்பு தகுதி சுற்று நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. இதன் கடைசி இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி நேற்று நியூ கலிடோனியாவை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி சார்பில் மைக்கேல் போக்ஸ்ஆல் (60-வது நிமிடம்), கோஸ்டா பார்பரோஸ் (68-வது நிமிடம்), ஜஸ்ட் (80-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெறுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் அந்த அணி 1982 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் தகுதி பெற்றிருந்தது.
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகியவை நேரடியாக தகுதி பெற்றிருந்தன. கடந்த வாரம் முதல் அணியாக ஜப்பான் தகுதி பெற்றது. இந்த வரிசையில் தற்போது நியூஸிலாந்து அணி இணைந்துள்ளது.
நியூ கலிடோனியா அணி, உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. 6 அணிகள் கலந்து கொள்ளும் கண்டங்களுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்று வெற்றி பெற்றால் நியூ கலிடோனியா, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நுழையலாம். இந்த பிளே ஆஃப் சுற்றில் ஆசியா, அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவை சேர்ந்த அணிகள் மல்லுக்கட்டும்.