உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ரூ.25.49 லட்சம் நிதியுதவி

0
290

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன், உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, கடந்த 2011-ம்ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், ‘காக்கி உதவும் கரங்கள்’ குழு மூலம் ரூ.25.49 லட்சம் நிதிதிரட்டினர். ராஜேந்திரனின் மகன்களான முகுந்த் அகிலேஷ் (5) பெயரில் ரூ.11,47,410 மற்றும் சம்ருத் (3) பெயரில் 11,47,253 காப்பீடு செய்தனர். மேலும், ரூ,2,54,831-க்குகாசோலை எடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம், காப்பீடு பத்திரம் மற்றும் காசோலையை எஸ்.பி. தங்கதுரை வழங்கினார்.

ரூ.20 லட்சம் நிதியுதவி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் அமுதா, சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ.15 லட்சம் கருணைத் தொகை மற்றும் அரசு ஊழியர் குடும்பநல நிதி ரூ.5 லட்சம் ஆகியவற்றை அவரது கணவர் செல்வம், மாமியார் மணி ஆகியோரிடம் நாமக்கல் ஆட்சியர் ச.உமா நேற்று வழங்கினார். மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பி முருகேசன் உடனிருந்தனர்.