ஜூன் இறுதிக்குள் கட்டணமில்லா பயண அட்டை: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

0
286

ஜூன் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 10-ம் தேதி பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு 2024-25 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்பட வேண்டும்.

இதில் உள்ள கால அளவைக் கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைப் பயன்படுத்தியோ, பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்தோ இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை சென்று வரலாம்.

இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையை இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி தொடங்கும் அல்லது முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதைக் கண்காணிக்க அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி செல்ல அனைத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.