மும்பை ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு ஆயுள் சிறை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

0
79

மும்பை ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.

மும்பை திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று வந்த இவர் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் சிறை சென்றார். சிறை தண்டனைக்குப் பின் இவர் படா ராஜன் தாதா கும்பலில் இணைந்தார். படா ராஜன் மறைவுக்குப் பின் அவரது கும்பலுக்கு ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி தலைமை தாங்கியதால் அவர் சோட்டா ராஜன் என அழைக்கப்பட்டார்.

இவர் பிரபல தாதா தாவூத் இப்ராகிமுடன் இணைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1993-ம் ஆண்டு தாவூத் அணியில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்தார். இவர் மீது 70 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு மத்திய மும்பை காம்தேவி பகுதியில் ‘கோல்டன் கிரவுன் ஓட்டல்’ உரிமையாளர் ஜெயா ஷெட்டியிடம், சோட்டா ராஜன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார். இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெறும்படி ஜெயா ஷெட்டி வேண்டுகோள் விடுத்தார்.

அவரது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு 2 மாதத்துக்குப் பின் அவரை அவரது ஓட்டலின் முதல் தளத்தில் வைத்து சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சோட்டா ராஜன் கும்பல் மீது மகாராஷ்டிரா குற்ற தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் பிடியில் 27 ஆண்டுகளாக சிக்காமல் இருந்தசோட்டா ராஜனை பிடிக்க இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் அந்நாட்டு போலீஸாரால் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியா கொண்டு வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பத்திரிகையாளர் ஜே.டே கொலை வழக்கில் இவருக்கு கடந்த 2018-ம்ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பாட்டீல், நேற்று தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாதா சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு முன் நடைபெற்ற விசாரணையின் போது சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த 3 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் போதிய சாட்சியம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here