ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது: மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கருத்து

0
335

ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது என மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.

ஆந்திராவில் வெகு விரைவில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் தற்போது ஆந்திர முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

என்.டி.ஆரின் மறைவுக்கு பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது அரசியல் வாரிசாக இவரது மகன் லோகேஷ் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும் முதல்வர் ஜெகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. முதல்வர் ஜெகனுக்கு எதிராக ஷர்மிளா மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, நேற்று விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது, எங்களுக்கென தனி தேர்தல் வியூகம் உள்ளது. மிக விரையில் ஆந்திராவில் எங்களின் நிலை குறித்து அறிவிப்போம்” என்றார்.

என்டிஆர் மகள்: பாஜக மாநில தலைவரான புரந்தேஸ்வரி, மறைந்த ஆந்திர முதல்வர் என்டிஆரின் மகள் ஆவார். 2014-ல் ஆந்திர பிரிவினைக்கு பிறகுஇவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்தார். இவரை ஆந்திர மாநில பாஜக தலைவராக கடந்த ஆண்டு ஜூலையில் கட்சி மேலிடம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here