மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சோதனையின்போது இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய்வழக்கு போட முயன்ற சம்பவத்தில் 4 போலீஸார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி பதிவில்: மும்பை இளைஞர் ஒருவரை பிடித்து இரண்டு போலீஸார் சோதனையிடுகின்றனர். அப்போது இரண்டு போலீஸார் சற்றுதொலைவில் ஒதுங்கி நிற்கின்றனர். அப்போது சோதனையிடும் போலீஸ் ஒருவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை இளைஞரின் பின்பாக்கெட்டுக்குள் எடுத்துவைக்கிறார். இதையடுத்து, அந்த இளைஞர் 20 கிராம் மெபெட்ரோன் வைத்திருந்தாக கூறி வழக்குப் பதிவுஇதையடுத்து, அப்பகுதியிலிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோதுதான் உண்மை என்ன என்பது தெரியவந்தது. இதையடுத்து, இளைஞரிடம் சோதனை நடத்தியபோலீஸார் கர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிளும் அடங்குவர் என்று துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் XI) ராஜ்திலக் ரோஷன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “போலீஸார் சோதனை செய்த நபர் டேனியல் என்பது தெரியவந்துள்ளது. கர் காவல் நிலையத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு காவலர்கள் வெள்ளிக்கிழமை மாலை கலினா பகுதியில் டேனியலை பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த காவலர்கள் டேனியல் மீது பொய்வழக்கு பதிவு செய்ய முயன்றது சிசிடிவி ஆதாரங்களின் மூலம் தெரியவந்தது” என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரான டேனியல் கூறுகையில், “ போலீஸ்காரர்கள் முதலில் என்னை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டினர். பின்னர் அவர்களின் செயல் கேமராவில் பதிவாகியுள்ளதை உணர்ந்ததும் என்னை விடுவித்துவிட்டனர்” என்றார்