ஹைதராபாத்தில் ரூ.1.33 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெலங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்தில் உள்ள கரகபட்லா எனும் ஊரில் போலி மருந்து தொழிற்சாலை இயங்குவதாக தெலங்கானா மாநில மருந்து கட்டுப்பாடு ஆணையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது, மல்காஜ்கிரி மாவட்டம், செர்லபல்லி பகுதியில் உள்ள மற்றொரு மருந்து தொழிற்சாலையின் பெயர்களால் தயாரிக்கப்படும் போலி நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் ரஷ்யா நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரூ. 1.33 கோடி மதிப்புள்ள அந்த போலி தொழிற்சாலை மருந்துகளை தெலங்கானா மருந்து கட்டுப்பாடு ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.