தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் அவர்களுக்கு முறையான உணவு மற்றும் குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்களுக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு கடலூர், மதுரை, சேலம், நெல்லை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தப்பிய கைதிகளில் ஒருவர் தங்களுக்கு தேனி சிறையில் முறையான உணவு, குடிநீர் வழங்காமல் அடித்து சித்ரவதை செய்ததால்தான் தப்பிச் சென்றதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தப்பிய 17 கைதிகளும் தேனி சிறையில் முறையான உணவு, குடிநீர் வசதி வழங்கப்படாமல், அடித்து துன்புறுத்தப்பட்டார்களா என்பது குறித்து தேனி, மதுரை, கடலூர், சேலம், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்களான மாவட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 17 பேரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி எஸ். பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரின் உத்தரவுப்படி நடத்தப்படும் இந்த விசாரணையின் போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர்கள் சம்பந்தப்பட்ட 17 பேரையும் நேரில் சந்தித்து விசாரிக்க வேண்டும்.
அப்போது சிறை அதிகாரிகள் யாரும் உடன் இருக்க அனுமதிக்கக்கூடாது.
ஒருவேளை அந்த கைதிகள் கூறுவது உண்மையாக இருந்தால் அதற்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.
தப்பிச்சென்று மீண்டும் கைது செய்யப்பட்ட போதும் அவர்கள் அடித்து சித்ரவதை செய்யப்பட்டார்களா என்பது குறித்தும், அவர்களின் உடலில் காயங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்கள் வரும் நவ.16-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.














