எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் முழுமையாக இடிப்பு: தற்காலிகமாக முதல் நடைமேடையில் செயல்படும்

0
21

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிக்காக, காந்தி இர்வின் சாலை அருகில் இருந்த பார்சல் அலுவலகம் முழுமையாக இடிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று எழும்பூர் ரயில் நிலையம். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் ஆகிய பணிகள் முடிந்த பிறகு, ரயில்வே கட்டிடம் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இதையடுத்து, காந்தி இர்வின் சாலை அருகில் ரயில் நிலையத்தையொட்டி பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, மறுசீரமைப்புப் பணிக்காக, காந்தி இர்வின் சாலை அருகில் இருந்த பார்சல் அலுவலகம் இடம் மாற்றப்பட்டு, அந்த இடம் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 3 தளம் வரை கட்டிடம் எழுப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, எழும்பூர் ரயில் நிலையத்தை ஒட்டி, காந்தி இர்வின் சாலை அருகில் இருந்த பார்சல் அலுவலகம் தற்போது ஒன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த பார்சல் அலுவலகம் முழுமையாக இடிக்கப்பட்டது.

புதிய பார்சல் அலுவலகம் 6 மாதங்களில் தயார் செய்யவும், காந்தி இர்வின் சாலை ஒட்டி, பன்னடக்கு வாகன நிறுத்துமிடம் ஒரு ஆண்டில் தயார் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here