இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இன்ஸடாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது ஸ்டோரி அந்த கருத்தை ஒட்டி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“உங்களின் மகளை காக்கவும். (அதை ஸ்ட்ரைக் செய்த ஃபான்ட்டில் பதிவு செய்துள்ளார்). உங்களின் மகன், சகோதரர், தந்தை, கணவர், நண்பர்களுக்கு கற்பியுங்கள்” என சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக சாமானிய மக்கள் முதல் மருத்துவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார். முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா, நடிகை ஆலியா பாட்டின் இன்ஸ்டா பதிவை பகிர்ந்திருந்தார்.