ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து இருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்தத் தொடரின் தொடக்கத்தில் சற்று மந்தமாகவே ஆரம்பித்தது. ஆனால், தொடர்பாதி நிலையை தாண்டிய பிறகு, தங்களின் அசாத்தியமான ஃபார்மைக் கண்டறிந்து தொடர் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கடைசி 7 லீக் போட்டிகளுக்கு அந்த அணியின் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸ் திரும்பியது அவர்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. அவர் தலைமையில் விளையாடிய அந்த 7 போட்டிகளில் 5-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
நடப்பு தொடரின் லீக் சுற்றில் 2 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஹைதராபாத் அணி வீழ்த்தி உள்ளது. இதனால் நாக் அவுட் சுற்றில் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசையில் அபிஷேக் சர்மா 563 ரன்களும், டிராவிஸ் ஹெட் 393 ரன்களும், இஷான் கிஷன் 569 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 606 ரன்களும் குவித்து வலுவாக உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு துறைக்கும் மீண்டும் ஒரு முறை அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து மிரட்டியது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வி அடைந்தது. எனினும் அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கடைசி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றில் நுழைந்தது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 583 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 397 ரன்களும், துருவ் ஜூரெல் 458 ரன்களும் விளாசி டாப் ஆர்டரில் வலுவாக திகழ்கின்றனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் அற்புதமாக செயல்பட்டு இருந்தார். நடப்பு சீசனில் ஜோப்ரா ஆர்ச்சர் 21 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவருக்கு உறுதுணையாக நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா ஆகியோரும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தனர். சுழற்பந்து வீச்சில் இந்த சீசனில் அறிமுகமான யாஷ் ராஜ் பூனியா கவனம் ஈர்த்து வருகிறார். இந்த வேகப்பந்து வீச்சு துறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் இஷான் மலிங்கா நடப்பு தொடரில் 19 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி உள்ளார். அதில் பவர்பிளேவில் சிறப்பாக செய்லபட்டு வருகிறார். பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் பாட் கம்மின்ஸும் தனது அனுபவத்தால் பலம் சேர்த்து வருகிறார்.
சுழற்பந்து வீச்சில் ஷிவாங்க் குமாரும் உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். போட்டி நடைபெறும் முலான்பூர் மைதானத்தில் நடப்பு சீசனில் லீக் சுற்றில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் 220-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் 254 விளாசியிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக அளவிலான ரன்கள் குவிக்கப்படக்கூடும்.















