‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு அமலாக்கத் துறை அறிவுரை

0
34

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: குஜராத்தின் வடோதராவில் அண்மையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலை பிடித்தோம். அப்போது தைவான் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். வடோதராவின் பிரபல வணிக வளாகத்தில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

அங்கு அதிநவீன செல்போன்களில் சுமார் 20 பேர் நாள்தோறும் பொதுமக்களை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிந்து வந்துள்ளனர். இதேபோல டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு உள்ளன. வடோதரா கும்பலிடம் இருந்து 761 சிம் கார்டுகள், 120 செல்போன்கள், 96 காசோலை புத்தகங்கள், 92 டெபிட் கார்டுகள், 42 வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

பெரும்பாலும் தைவான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கும்பல்கள் இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மட்டுமன்றி தெற்கு ஆசியா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு மையத்தில் இருந்து நாள்தோறும் ரூ.10 கோடி வரை மோசடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நாள்தோறும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக்கூடாது. எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்காது. காணொலி வாயிலாகவும் விசாரணை நடத்தப்படாது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளின்படி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது. இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரம் தொடர்பாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றம் தொடர்பாக பெங்களூருவில் சரண் ராஜ், கிரண், சாஷி குமார், சச்சின் தமிழரசன், பிரகாஷ், அஜித், அரவிந்தன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து ரூ.159 கோடியை மோசடி செய்துள்ளனர். எட்டு பேரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் போன்று 8 பேரும் நடித்து உள்ளனர். பொதுமக்களை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி உள்ளனர். இதை நம்பி ஏமாந்தவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.

பங்கு சந்தையில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து மோசடி செய்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். 24 போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

கைதான 8 பேருக்கும் ஹாங்காங், தாய்லாந்தை சேர்ந்த மோசடி கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது. கைது செய்யப்பட்ட தமிழரசன் என்பவர் போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளை தொடங்கி உள்ளார். வெளிநாட்டு மோசடி கும்பல்களுக்கும் இந்திய கும்பல்களுக்கும் இடையே அவர் பாலமாக செயல்பட்டு இருக்கிறார்.

அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் போலி நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட்டு பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்துள்ளனர். எட்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமலாக்கத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here