கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் கிளீட்டஸ் (49) அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (36). இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் போது பிரபு என்பவர் கிளிட்டசிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அதன் பிறகு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெளி நாட்டில் இருந்து இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். பணம் கேட்ட ஆத்திரத்தில் கடந்த 1-ம் தேதி கிளிட்டஸ் மற்றும் அவரது மனைவி இருவரையும் வீடு புகுந்து பிரபு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக புகாரளித்தும் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று(செப்.9) பாதிக்கப்பட்ட கிளிட்டசுக்கு ஆதரவாக கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமையில் மேல்புறம் திருவட்டார் தக்கரை குழித்துறை போன்ற இடங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கருங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புகார் அளித்து ஒன்பது நாட்களாக வழக்கு பதிவு செய்யவில்லை என்று அங்கு திமுக நிர்வாகிகளுக்கும் போலீசாரின் வாக்குவாதம் ஏற்பட்டது. வழக்கு பதிவு செய்தால் மட்டுமே கலைந்து செல்வதாக திமுகவினர் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.