பணியின்போது கண்ணியமின்றி பேசினால் நடவடிக்கை: மைக் மூலம் மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

0
89

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும் வாகனச் சோதனைகளின் போதும் கண்ணியமின்றி தேவையற்ற வார்த்தைகளைப் பேசும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அனைத்துக் காவலர்களுக்கும் வாக்கி டாக்கி மைக் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார். அவரின் இந்த எச்சரிக்கை ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் மதுரை பரவை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு ஆய்வாளரான தவமணி பூ விவசாயி ஒருவரை ஆபாசமாகப் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தவமணியை பணியிடை நீக்கம் செய்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன், தவமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் மதுரை மாநகர காவல் காவல்துறையினருடன் வாக்கி டாக்கி மைக் மூலமாகப் பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன், “தற்போது அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது ஒரு தணிக்கைச்சாவடியில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளோம். 24 மணி நேரமும் கண் விழித்துக் கஷ்டப்பட்டு பணிபுரிகிறோம். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் சிலர் நடந்துகொள்கிறார்கள்.காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும், வாகன சோதனையின் போதும் சட்டப்படி எது சரியானதோ அதைப் பற்றிச் சொல்லும் விதம் உள்ளது. ஆனால், அதை உரத்த குரலில் கத்தித் தான் சொல்ல வேண்டும் என்பதோ ஆபாசமான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்பதோ கிடையாது. சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்யத்தான் போகிறோம்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும், வாகனச் சோதனையின் போதும், பேட்ரல் வாகனங்களில் செல்லும் போதும் காவல் துறையினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கையாகவும் அறிவுறுத்தலாகவும் தெரிவிக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து மைக்கில் பேசிய அவர், “பொதுமக்களிடம் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். மதுரை மாநகர காவல் ஆணைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தேவையில்லாமல் பேசக்கூடிய காவல்துறையினர் குறித்தான விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம்.

அதுபோன்ற காவல்துறையினரைத் தனியாக அழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும். அதை மீறியும் அவர்கள் தேவையில்லாத வார்த்தைகளைத் தொடர்ந்து பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு நேற்று நடந்த (தவமணி சஸ்பெண்ட்) சம்பவம் தான் உதாரணம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மதுரை காவல் ஆணையரின் இந்த வாக்கி டாக்கி எச்சரிக்கை ஆடியோவானது இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here