இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் தகுதி நீக்கம்: சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை

0
438

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி மாற்று கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதனியா கூறியதாவது:

இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. நிதி மசோதாவில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரிய கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்கள் செயல்பட்டுள்ளனர்.

கட்சி மாறி வாக்கு.. இதன் காரணமாக, அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது, உடனடியாக அமலுக்கு வருகிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதனியா தெரிவித்தார்.

இந்த ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு கட்சி மாறி வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை இருந்தும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது.

மேலும், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். 15 பாஜக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்ததையடுத்து, நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here