தமிழக சட்டப்பேரவையில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் கமலி பேசியதாவது: செட்டிநாடு, நடுவூர், சின்னசேலம் அரசுப் பண்ணைகளில் முயல் வளர்ப்பு பிரிவுகள் நிறுவப்பட்டு புறக்கடை முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.70 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படு்ம். கோழிப்பண்ணைகளுக்கு நோயை கண்டறிதல் தொடர் கண்காணிப்பு அவசியம் என்பதால் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.30 கோடி செலவில் உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம் (கிரேடு-2) அமைக்கப்படும்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரூ.34 கோடி செலவில் தினசரி 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட நவீன ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் அமைந்துள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கிடேரி வளர்ப்பு மையம் ஏற்படுத்தப்படும். தெருவில் உள்ள நாய்களை தத்தெடுக்கும் வகையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மூலம் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
தெருநாய்களை தத்தெடுப்பது ஊக்குவிக்கப்படும். திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.71 லட்சம் செலவில் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்கப்படும்.
நீலகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6.60 கோடி செலவில் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி செய்யப்படும். கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.110 கோடியில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் இந்தாண்டு முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்கவும், கிராமப்புற பெண்கள் நிலையான வருமானம் ஈட்டவும் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.
கால்நடை காப்போம் என்ற புதிய காப்பீடு திட்டம் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படும். வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவமனை தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கமலி தெரிவித்தார்.















