சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமையால் மக்கள் பாதிப்பு

0
21

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களில், 40 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு இ-கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி என்பது மனிதர்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா ஆகும். இதில் பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலானவை உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை.

சில வகை பாக்டீரியா தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேக வைக்காமலும் அவற்றை உட்கொள்ளும்போது பாதிப்பு ஏற்படுகிறது.

வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறவில்லை என்றால், சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது. இ-கோலி பாதிப்பை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், நீர்ச்சத்தை தக்கவைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் அளிக்கப்படும். முழுமையாக சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடையலாம்” என்றனர்.

பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மாசுபட்ட குடிநீர் மற்றும் உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here