ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – ஊழல் வழக்கில் டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

0
203

அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 7,200 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் ஒதுக்கியதில் விதிகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா, அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரபியுல் ஆலம் இன்று தீர்ப்பளித்தார்.

இரண்டு நிலங்கள் ஒதுக்கப்பட்டது தொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளிலும் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரத்வான் முஜிப் சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு இரண்டு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்த ஒரே குற்றவாளியான முகமது குர்ஷித் ஆலமுக்கு தலா ஓர் ஆண்டு என இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்ற அனைவருக்கும் தலா ஒரு லட்சம் டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களை அடுத்து, 2025 ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து தப்பி விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தார். தற்போது அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். நீதிமன்ற விசாரணையின்போது அவரை தலைமறைவானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here