தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களின் ‘இ-கேஒய்சி’ மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை செய்யாவிட்டால், மானியத் தொகை ரத்து செய்யப்படும். புதிய சிலிண்டர் முன்பதிவு ஏற்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
முறைகேடான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் ‘இ-கேஒய்சி’ (e-KYC) எனும் மின்னணு சரிபார்ப்பை மேற்கொள்ள, வாடிக்கையாளர்களுக்கு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.
சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர் சம்பந்தப்பட்ட சிலிண்டர் விநியோக ஏஜென்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று, எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலியில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் வாடிக்கையாளரின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படும். ஏற்கெனவே, மின்னணு சரிபார்ப்புக்கான கடைசி தேதி ஆக.16-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் வசதிக்காக, ஆக.23-ம் தேதி (நேற்று) வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
கடந்த வாரம் வரை தமிழகம் முழுவதும் 93 சதவீதம் பேர் சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள வாடிக்கையாளர்களும் சரிபார்ப்பை நிறைவு செய்ய வசதியாக, மின்னணு சரிபார்ப்புக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியபோது, “அனைத்து வாடிக்கையாளர்களும் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதற்கான அவகாசம் தற்போது ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இ-கேஒய்சி நடைமுறையை நிறைவு செய்யாவிட்டால், மானியத் தொகை ரத்து செய்யப்படும். புதிய சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது, கணக்கு முடக்கப்பட்டதாகக் காண்பித்து, முன்பதிவு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.















