காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: ரூ.2.14 லட்சம் ரொக்கம் பறிமுதல்

0
153

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய, விடிய விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதன், தொடர்ச்சியாக மேல்வல்லத்தில் உள்ள சார்பதிவாளர் நித்யானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சார் பதிவாளராக நித்யானந்தம் உள்ளார். நேற்று புதன்கிழமை என்பதால் அதிகப்படியான பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய், தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன்-19) இரவு 7.45 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த சோதனையின்போது புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். அந்த நேரத்திலும் சார் பதிவாளர் நித்யானந்தம் அலுவலக பணியில் ஈடுபட்டிருந்தார். போலீஸார் சோதனை நடத்த தொடங்கிய நேரத்தில் மழையின் காரணமாக திடீரென மின் நிறுத்தம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜெனரேட்டர் உதவியுடன் சோதனையை தொடர்ந்தனர். இந்த சோதனை இன்று (ஜூன் – 20) அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது. இதில், அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் அலுவலக ஆவணங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிக்கிய திமுக புள்ளி: காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது வேலூர் மாநகராட்சி 1-வது திமுக கவுன்சிலர் அன்பு இருந்தார். ரியல் எஸ்டேட் அதிபரான அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அவருக்கு அந்த நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன வேலை இருந்தது என்பது தொடர்பாக போலீசார் விரைவில் அவரிடம் விசாரிக்க உள்ளனர். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சார் பதிவாளர் நித்யானந்தத்தை சந்தித்து பேச முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையின்போது புரோக்கர் உள்ளிட்டோரிடம் இருந்து மட்டும் ரூ.1.50 லட்சம் பணமும் அலுவலக ஆவணங்களில் மறைத்து வைத்த பணம் ரூ.64 ஆயிரம் பணம் இருந்துள்ளது. காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.2.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார், சார் பதிவாளர் நித்யானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீட்டில் திடீர் சோதனை: காட்பாடி சார் பதிவாளர் நித்யானந்தம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் வேலூர் அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள மேல்வல்லத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜூன் -20) காலை 8 மணியளவில் சோதனை நடத்த தொடங்கினர். இந்தச் சோதனையில் நித்யானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் பலவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.