மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவான ‘ரீமல்’ புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் வசித்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் 21 மணி நேரம் மூடப்பட்டது. 394 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நள்ளிரவில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக புயல் கரையை கடந்தது. அப்போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொல்கத்தாவில் மட்டும் 100 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துவிழுந்தன. பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் புயல், மழைகாரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசித்த 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால்உயிரிழப்பு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும். வெள்ளம் சூழ்ந்தபகுதிகளில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குடிநீர், மின்விநியோக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது’’ என்றார்.
தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி மோசின் ஷாகிதி கூறும்போது, ‘‘மேற்கு வங்கம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரிபுராவுக்கும் ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் ரீமல் புயல் தாக்கத்தால் 1.50 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. அங்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாகாணங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது ரீமல் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இதன்காரணமாக, திரிபுரா, அசாம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்யும். ஒடிசா, ஜார்க்கண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்யக்கூடும். மேற்கு வங்க மாநிலத்தில் இன்றும் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.