Home மாநில செய்திகள் புயல் முன்னெச்சரிக்கை – புதுச்சேரியின் ஏனாம் பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

புயல் முன்னெச்சரிக்கை – புதுச்சேரியின் ஏனாம் பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

0

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமுக்கு இரண்டு கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை புதன்கிழமை முற்பகலில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் அருகே அதிதீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் இன்றும் (செவ்வாய்கிழமை), நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மாலை 4 மணி முதல் 29 ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஏனாம் மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா தெரிவித்துள்ளார். புயலால் பாதிப்புகளை எதிர்கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 2 கம்பெனி தேசிய பேரிடர் மீட்புப் படை ஏனாமுக்கு விரைந்துள்ளனர்.

மேலும் புதுவையை சேர்ந்த 33 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஏனாமுக்கு விரைந்துள்ளனர். புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக, ஏனாமில் மொத்தம் 19 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி 142 குடிசை வீடுகளில் வசித்து வந்த 552 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனாமில் 52 மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனாமில் பிரசவத்துக்கு வாய்ப்புள்ள 5 கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version