Home மாநில செய்திகள் 1995க்குப் பிறகு இதுதான் முதல்முறை – தேனியில் அதிக கைதிகள் தப்பி ஓடிய சம்பவம்

1995க்குப் பிறகு இதுதான் முதல்முறை – தேனியில் அதிக கைதிகள் தப்பி ஓடிய சம்பவம்

0

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 1995-ம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்து 43 பேர் தப்பிய சம்பவத்துக்கு அடுத்ததாக அதிக கைதிகள் தப்பிய சம்பவமாக தேனி நிகழ்வு அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 4 பிளாக்-களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இதில் 2-ம் எண் பிளாக்கில் ஒரு அறையில் 17 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கஞ்சா, திருட்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாக நேற்று 11 மணிக்கு அவர்கள் பெருங்குரலில் அலறினர். இதனைத் தொடர்ந்து காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 3 போலீஸார், அடைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்தனர். அப்போது ஒட்டுமொத்தமாக சூழ்ந்து போலீஸாரை தாக்கி விட்டு அவர்கள் தப்பியோடினர்.

சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 பேர் தப்பிச் சென்ற சம்பவம் போலீஸ் மற்றும் சிறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு அதிகளவில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் வேலூர் கோட்டை சிறையில் நடந்தது. 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 43 சிறைவாசிகள் வேலூர் கோட்டையில் இருந்த சிறப்பு சிறையில் இருந்து தப்பினர்.

இதற்காக சிறையில் இருந்து ரகசியமாக சுமார் 153 அடிநீளத்துக்கு சுரங்கப்பாதை தேண்டினர். பின்பு 43 பேரும் இதன் வழியே தப்பிச் சென்றனர். ஒரே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவமாக சிறை வரலாற்றில் இது பதிவு செய்யப்பட்டது.

அவ்வப்போது ஒன்று, இரண்டு பேர் இது போன்று சிறையில் இருந்தும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்ற போதும் தப்பியுள்ளனர். இந்நிலையில் வேலூர் சம்பவத்துக்குப் பிறகு அதிக கைதிகள் தப்பிச் சென்ற சம்பவமாக தேனி நிகழ்வு அமைந்து விட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version