கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் மீராபாய் சானு.
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 105 கிலோ தூக்கியும் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானு தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
மேலும் ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2018, 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் மீராபாய் சானு தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் நைஜீரிய வீராங்கனை ரூத் அசுக்குவோ நியாங் வெள்ளியும், மலேசியாவின் ஐரீன் ஜேன் ஹென்றி வெண்கலமும் வென்றனர்.
ரிஷிகண்டா சிங்குக்கு வெள்ளி
நேற்று நடைபெற்ற ஆடவர் 60 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சனம்பம் ரிஷிகண்டா சிங் பங்கேற்றார். இதில் அவர் மொத்தமாக 264 கிலோவைத் தூக்கி (ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 143 கிலோ) 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளியைத் தட்டிச் சென்றார்.
இதே பிரிவில் மலேசிய வீரர் முகமது அனிக் கஸ்டான் 273 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தையும், கென்ய வீரர் ஜோஷுவா மபோயா 260 கிலோ தூக்கி வெண்கலத் பதக்கத்தையும் வென்றனர். இதன்மூலம் இந்த கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கமாக இது அமைந்துள்ளது.
லான் பவுல்ஸ் ரூபா, பிங்கி தோல்வி
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ரூபா ராணி திர்க்கி, பிங்கி சிங் ஆகியோர் தோல்வி கண்டனர். நேற்று நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான மகளிர் ஜோடி செக்சனல் பிரிவு ஆட்டத்தில் ரூபா ராணி-பிங்கி சிங் ஜோடி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் புதுல் சோனோவால் 4-8, 8-9 என்ற கணக்கில் மலேசியாவின் இஸ்ஸத் ஷமீர் டிசுல்கெப்ளேவிடம் தோல்வி கண்டார்.
4×200 தொடர் நீச்சல்
அதேநேரத்தில் 4×200 மீட்டர் தொடர் நீச்சல் ஃப்ரீஸ்டைல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்சன் சசிக்குமார், அனீஷ் சுனில் குமார் கவுடா, ஆர்யன் நெஹ்ரா, ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி முன்னேற்றம் கண்டது.















