கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ள ரிஷிகண்டா சிங், கட்டிடம் கட்டுமிடத்தில் தினக்கூலியாக இருந்து சாம்பியனாக மாறியவர் என்ற செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளம்வயதை பெரும்பாலும் வேலை பார்த்தே கழித்துள்ளார். இம்பாலின் பல்வேறு பகுதிகளில் கட்டிட வேலைகளில் அவர் தினக்கூலியாக வேலை பார்த்துள்ளார். செங்கல், சிமெண்ட், பலகைகளை சுமந்து பிழைப்பை நடத்தி வந்த அவர் தனது விடாமுயற்சியால் இன்று உலக விளையாட்டு ரசிகர்களை திரும்பிப் பார்த்து வந்துள்ளார்.
தினந்தோறும் செங்கல், கட்டுமானப் பொருட்களை தூக்கி தூக்கி தனது உடலை வலுப்படுத்தி வந்துள்ளார். இதனால் இவரது கவனம் பளுதூக்குதல் விளையாட்டுக்கு சென்றுள்ளது. இதற்கு முன்பு 2017-ல் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் அவர் வெண்கலத்தைக் கைப்பற்றியிருந்தார்.
தனது வெற்றி குறித்து ரிஷிகண்டா சிங் கூறும்போது, “முதலில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறிய அளவிலான வெற்றிகளைப் பெற்றேன். அதன் பின்னர் போதிய பணம் கிடைக்காததால் விளையாட்டை விட்டு விட்டு கட்டிட வேலையில் சேர்ந்தேன்.
தினக்கூலி வேலையிலிருந்து பளுதூக்கும் விளையாட்டில் சேர்ந்த போது சாதனை படைக்க முடியும் என்று நம்பினேன். தொடக்கத்தில் பெரும்பாலும் தோல்விகளே கிடைத்தன. ஒரு சிறந்த பளுதூக்கும் வீரராக வேண்டும் என்ற என் கனவும், அந்த விளையாட்டில் எனக்கிருந்த எதிர்காலமும் முடிந்துவிட்டதாகவே தோன்றியது. அப்போது நான் இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலையைச் செய்தேன்.
அதன் பின்னர் மீண்டும் பளுதூக்குதல் போட்டிகளுக்குத் திரும்பினேன். விடாத முயற்சியால் இப்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்” என்றார்.
மணிப்பூர் மாநிலத்திலிருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீரர் ரிஷிகண்டா சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இம்பால் மேற்கு மாவட்டத்திலுள்ள நகைரங்பாம் கிராமத்தில் வளர்ந்த இவருக்கு விளையாட்டுதான் உலகமாக உள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது நடத்தப்பட்ட ஒரு உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சியில் எனது ஆசிரியர் ஒருவர் என்னை விளையாட்டில் சேருமாறு ஊக்கப்படுத்தினார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இணைந்து பயிற்சி பெறுமாறு கூறினார்.
அங்கு எனக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சித் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இலவச உணவு, தங்குமிடம் கிடைக்கும் என்றும் அவர் என்னிடம் கூறினார். மறுநாளே இம்பால் சென்றுவிட்டேன். என் தந்தை ஒரு வாடகை கார் ஓட்டுநராக உள்ளார். இந்திய விளையாட்டு ஆணையம் எப்படி செயல்படுகிறது. எப்படி ஆணையத்தில் சேர்வது என்பது குறித்து எங்களுக்கு தெரிவிக்கவோ, வழிமுறைகளைச் சொல்லி வழிகாட்டவோ யாரும் இல்லை. நான் தனியாகவே சென்று சேர்ந்துவிட்டேன்.
ஆரம்பத்தில் குத்துச்சண்டை, கால்பந்து மற்றும் பளுதூக்குதல் ஆகிய மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெற்றேன். பின்னர் இறுதியாக பளுதூக்குதல் பயிற்சிக்கு என்னைத் தயார் செய்தேன். தினமும் எனது வீட்டிலிருந்து விளையாட்டு மைதானத்துக்கு சைக்கிளிலேயே 40 கிலோமீட்டர் தூரம் சென்று பயிற்சி பெற்று வந்தேன்.
பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதாலும், பயிற்சிக்குப் பிறகு மைதானத்தில் உணவு கிடைப்பதாலும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தேன். என் பெற்றோர்களால் எனக்கு அந்த வசதியைச் செய்து தருவது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். 2017-ல் சில போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த சில ஆண்டுகள் எனக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.
இதனால் விளையாட்டிலிருந்து விலகி, தினக்கூலி வேலைக்குச் சென்றேன். சில நாட்கள் செங்கற்கள், கற்கள், சிமெண்ட் கலவையை சுமந்து தினக்கூலியாக வேலை பார்த்தேன். சாலையோர உணவகத்திலும் வேலை பார்த்தேன். ஒரு நாளைக்கு 150 அல்லது 200 ரூபாய் மட்டுமே கிடைக்கும். அந்த வருமானம் முழுவதும் எனது தம்பியின் தேவைகளுக்கே செலவிடப்பட்டது.
ஓராண்டு கழித்து மணிப்பூர் பளுதூக்குதல் சங்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததது. அதுதான் எனதுவாழ்க்கையை மாற்றியமைத்தது. பயிற்சிக்கு பணம் இல்லாததால் தற்போது பயிற்சி மேற்கொள்ளவில்லை என்று மணிப்பூர் பளுதூக்குதல் சங்க நிர்வாகி சுனிலிடம் தெரிவித்தேன்.
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவாயா என்று அவர் கேட்டார். அதற்கு விருப்பம் தெரிவித்தேன். கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட அயராத உழைப்பு, பயிற்சியால் தற்போது உங்கள் எதிரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாம்பியனாக நிற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















