டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் வேளையில் ஹரியானாவில் பயிர் கழிவுகளை எரித்த 16 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில்காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. வாகனப் புகை, தொழிற்சாலை உமிழ்வு மற்றும் கட்டுமானப் பணிகளால் பரவும் தூசுக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஹரியானா, பஞ்சாப் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஹரியானாவில் பயிர் கழிவுகளை எரித்ததாக 16 விவசாயிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கைத்தால் பிராந்தியத்தில் பயிர்கழிவுகளை எரித்ததாக இந்த ஆண்டு 22 புகார்கள் வந்தன. இதில் 16 விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர். பயிர் கழிவுகளைஎரிப்பது ஜாமீனில் வரக்கூடிய குற்றம் என்பதால் 16 விவசாயிகளும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” என்றார்.
டெல்லியில் காற்று மாசுபாடு: ஹரியானா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 100 விவசாயிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் டெல்லியில் நேற்று காலையில் காற்று தரக்குறியீடு 320 ஆக இருந்ததாக மத்தியமாசுக்கட்டுப்பாட்டு வாரியம்தெரிவித்தது. இது தலைநகரில்காற்று மாசுபாடு மிக மோசமாகஇருப்பதை காட்டுகிறது. காற்றுதரக்குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் 400-க்குமேல் சென்றால் அது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.
காற்று தரக்குறியீடு இணையத்தின் தரவரிசைப்படி நேற்று உலகில் பாகிஸ்தானின் லாகூருக்கு பிறகு இரண்டாவது மாசுபட்ட நகரமாக டெல்லி இருந்தது. இந்நிலையில் சாதகமற்ற வானிலை காரணமாக வரும் நாட்களில் டெல்லியில் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறிஉள்ளது.