மக்களின் போராட்டத்தை முடக்க முடக்க அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகமாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்களது கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையால் மாசு ஏற்படுகிறது.
இந்த ஆலையை மூடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அடிப்படையில் ஆலை மூடப்பட வேண்டியதுதான். எனவே, இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் ஆலையால் எங்கள் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆலைக்கு எதிராக சுடுகாட்டில் போராட அனுமதி கோரி அனுப்பிய விண்ணப்பம், காவல் துறையால் நிராகரிக்கப்பட்டது. எனவே, போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுடுகாட்டில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் காவல் துறைக்கு என்ன பிரச்சினை உள்ளது?
மாசுபாட்டால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தங்களது பகுதியில் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவலை அரசுக்கு தெரிவிப்பதற்காக போராட்டம் நடத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்துள்ளனர். இங்கு போராட்டம் நடத்துவதால், இறந்து போனவர்களின் ஆவிகள் பிரச்சினை செய்யப் போகிறதா?
மக்களின் போராட்டத்தை முடக்க முடக்க, அதனால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகமாகும்’ என கருத்து தெரிவித்தார்.
மேலும், ‘இந்த ஆட்சியில் திக, திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என யார் அனுமதி கேட்டாலும் வழங்குவதில்லை. ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கூட அனுமதி வழங்கப்படவில்லை, அவர்களும் நீதிமன்றத்தை நாடுகிறார்கள்’ என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், ‘எங்கும் போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டியதுதான்’ என்று நீதிபதி கூறினார்.
இதையடுத்து, அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
