பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமகவின் களச் செயல்பாடு களை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒருதொகுதி செயலாளர், தொகுதிதலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பும், நியமனங்களும் விரைவில் வெளியிடப்படும்.
மாவட்ட செயலாளர் மாவட்ட அளவில் கட்சியின் பிரதிநிதியாகசெயல்படுவார். உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தல் பணிகளை மேற்கொள்வார். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் ஏற்பாடு செய்வார்.அவர் கட்சியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைதல், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தபணிகளுக்கு தொகுதி செயலாளர்ஒத்துழைப்பு வழங்க வேண்டும். .தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளருக்கு அடுத்த நிலையில் இருந்து செயல்படுவார். தேர்தல் பணிகளை தொகுதி அளவில், மாவட்ட தேர்தல் பணிக் குழுவினருடன் இணைந்து மேற்கொள்வார்.ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 250, 300 என்ற அளவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு, பிரத்யேககுழுக்களை அமைப்பதற்கு தொகுதிசெயலாளர்தான் பொறுப்பாவார்.
தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல், வாக்குச்சாவடி குழுக்களை அமைத்தல் ஆகியவற்றில் தொகுதி செயலாளருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். எனினும், மாவட்டச் செயலாளர் ஏதேனும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கினால், அதை தொகுதி செயலாளர் செவிமடுக்க வேண்டும்.
தொகுதி அளவில் கட்சியின் பிரதிநிதியாக செயல்படும் தொகுதி செயலாளர், தொகுதி தலைவர் ஆகியோரை கட்சித் தலைமை நேரடியாக நியமிக்கும். இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.